
அத்திப்பூ போல அரிதாக மலரும் ஒரு படைப்பு – ‘சல்லியர்கள்’
தமிழ் சினிமாவில் அரிதாகவே சில படங்கள் வெளியாகும். வணிகக் கோஷங்களில் சிக்காமல், ஒரு சமூகப் பொறுப்போடு, வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்களை நேர்மையாக பேசும் படங்கள் அவை. அத்தகைய அரிதான படைப்புகளில் ஒன்றாக ‘சல்லியர்கள்’ திரைப்படம் தன்னை உறுதியாக நிலைநிறுத்திக் கொள்கிறது.
‘சல்லியர்கள்’ என்ற பெயரே இந்தப் படத்தின் முதல் வெற்றி. போர்க்களத்தில் பணிபுரியும் மருத்துவர்களைக் குறிக்கும் இந்தச் சொல், பலருக்கு புதிதாக இருக்கும். அந்தச் சொல்லைத் தேர்ந்தெடுத்ததிலிருந்தே இயக்குநரின் ஆய்வும், நேர்த்தியும் வெளிப்படுகிறது. இதற்காக முதலில் இயக்குநர் கிட்டுவுக்கு ஒரு நேர்மையான பாராட்டு அவசியம்.
இந்தப் படத்தின் கதைக்களம் தமிழ் சினிமா இதுவரை தொடாத ஒரு தளம். போர்க்களம் என்றால் ஆயுதம், ரத்தம், சண்டை என்ற ஒரே கோணத்தில் பார்க்கும் வழக்கத்திலிருந்து முற்றிலும் விலகி, போர்க்களத்தில் மனிதநேயத்தின் அவசியத்தை பேசுகிறது ‘சல்லியர்கள்’. குறிப்பாக, போரின் நடுவே மருத்துவர்களின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை மிக அழுத்தமாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் பதிவு செய்கிறது.
இலங்கைத் தமிழர்களின் போராட்ட காலகட்டத்தில், தலைவர் பிரபாகரன் அவர்கள் எவ்வாறு மனிதநேயத்தோடு நடந்துகொண்டார் என்பதற்கான சாட்சியமாகவும் இந்தப் படம் விளங்குகிறது. போர்க்களத்தில் காயமடைந்த வீரர்களுக்கு, அவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கருத்தில் கொள்ளாமல், உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டதை படம் மிக அழகாக சொல்லிச் செல்கிறது. தமிழர் வீரர்களுக்கு மட்டுமல்ல, காயமடைந்த சிங்கள போர் வீரர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட அந்த மனிதநேயத்தை, படம் எவ்வித மிகைப்படுத்தலும் இன்றி நேர்மையாக பதிவு செய்துள்ளது. மனிதநேயமிக்க உலகத் தலைவனின் பண்புகளை படம் நுட்பமாக உணர்த்துகிறது.
இந்த மையக் கதைக்களத்தோடு, ஒரு நெஞ்சை நெகிழ வைக்கும் காதல் கதையையும், ஒரு போராளியின் உள்ளார்ந்த போராட்டத்தையும் இணைத்த விதம் பாராட்டுக்குரியது. திரைக்கதையும், படமாக்கிய விதமும் மிக நேர்த்தியானது. உணர்ச்சியை தூண்டும் காட்சிகள் எங்கும் செயற்கையாகத் தெரியவில்லை; அனைத்தும் இயல்பாக பார்வையாளருக்குள் ஊடுருவுகின்றன.
போர்க்களத்தில் ரத்தத்தின் அவசியத்தை உணர்த்தும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகர் கருணாஸ் சிறிது நேரமே தோன்றினாலும், அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் ஊதியிருக்கிறார். அவரது நடிப்பு படத்தின் உணர்ச்சி வலிமையை மேலும் உயர்த்துகிறது.
படத்தில் நடித்துள்ள பெரும்பாலானோர் புதுமுகங்கள். ஆனால் அந்த புதுமுகங்களைக் கொண்டு, இவ்வளவு கனமான, பொறுப்பான ஒரு கதையை சுமந்து செல்ல வைத்திருப்பது இயக்குநரின் மிகப்பெரிய சாதனை. புதிய முகங்களால் ஒரு காவியத்தை உருவாக்க முடியும் என்பதற்கு ‘சல்லியர்கள்’ சிறந்த உதாரணம்.
இத்தனை தரமான, முக்கியமான ஒரு படத்துக்கு தமிழ் சினிமாவில் கிடைக்கும் அநியாயம் தான் மிகப்பெரிய வேதனை. ஒரு சிறந்த படத்தை வெளியிட திரையரங்கம் கிடைக்காமல், தயாரிப்பாளரும் இயக்குநரும் கலங்கி நிற்கும் நிலை, இன்று தமிழ் சினிமாவின் கசப்பான உண்மை. இந்த நிலை எப்போது மாறும்? இதற்கு யார் தீர்வு காணப்போகிறார்கள்? என்ற கேள்விகள் தவிர்க்க முடியாதவை.
சிறிய படங்கள் மட்டுமல்ல, தரமான படங்களே ரசிகர்களை அடைய முடியாத சூழல் நீடித்தால், எதிர்காலத்தில் நல்ல சினிமாவுக்கே இடமில்லாமல் போகும் அபாயம் உள்ளது. அரசு, தயாரிப்பாளர் சங்கங்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அமைப்புகள், இப்படிப்பட்ட தரமான படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, அவற்றை ஊக்குவிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
திரையரங்கம் கிடைக்காத காரணத்தால், ‘சல்லியர்கள்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்பதே நல்ல சினிமாவை விரும்பும் ஒவ்வொரு ரசிகனின் கடமையாகிறது. ஒட்டுமொத்த ரசிகர்களின் ஆதரவே, இப்படிப்பட்ட படைப்புகளுக்கு உண்மையான வெற்றியாக அமையும்.
‘சல்லியர்கள்’ – இது ஒரு திரைப்படம் மட்டுமல்ல;
மனிதநேயத்தின் பதிவும், போர்க்களத்தின் மறைக்கப்பட்ட வரலாறும்
