Saturday, January 3
Shadow

தண்டகாரண்யம் – விளிம்பு மனிதர்களின் குரல்

தண்டகாரண்யம் – விளிம்பு மனிதர்களின் குரல்

 

விளிம்பு நிலையில் வாழும் மக்களின் உயிரை அதிகாரம் தங்களின் அரசியல் லாபத்திற்கான கருவியாக மாற்றி விட்ட கொடுமையான உண்மையை நேர்மையாகவும் காத்திரமாகவும் பதிவு செய்கிறது தண்டகாரண்யம்.

 

கிருஷ்ணகிரி மலைப்பகுதியில் வாழும் பழங்குடியினத்தைச் சேர்ந்த தினேஷும் கலையரசனும் அண்ணன் – தம்பிகள். தம்பிக்கு வனக்காவலர் பணி கிடைக்க வேண்டும் என தினேஷ் பாடுபடுகிறார். அதேசமயம், கலையரசனும் அந்த வேலை தான் தனது காதலுக்கும், தனது எதிர்கால நல்ல வாழ்வுக்கும் வழி காட்டும் என நம்பி கடுமையாக உழைக்கிறார்.

 

ஆனால், அரசு நடக்கும் போக்கு வேறாகிறது. வனக்காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட கலையரசன் உள்ளிட்ட பலரை, “சரணடைந்த நக்ஸ்லைட்டுகள்” என்ற பெயரில் பதிவு செய்து, பயிற்சிக்கு அனுப்புகிறது மத்திய அரசு. அந்தப் பயிற்சி முடிந்த பிறகு கலையரசனின் நிலை என்ன ஆனது? பழங்குடியின மக்களுக்கு ஆதரவாக களமிறங்கும் தினேஷின் முயற்சிகள் அதிகாரத்தின் முன் வெற்றி பெற்றதா? – இதற்கான பதிலை படம் சொல்லுகிறது.

 

இயக்குநர் அதியன் ஆதிரை, தினேஷுக்கும் கலையரசனுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். இருவரும் தங்கள் கேரக்டரின் தீவிரத்தையும் வலிமையையும் உணர்ந்து, உண்மையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அதேபோல், நாயகிகள் ரித்விகா, வின்சு சாம் ஆகியோரும் தங்கள் பங்கில் துல்லியமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். டான்சிங் ரோஸ் அபாரமாக நடித்திருக்கிறார். நகைச்சுவை மற்றும் வலிமையான கதாபாத்திரங்களால் பாலசரவணனும் அருள்தாஸும் சிறப்பாக கவனம் ஈர்க்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் பிரதீப் காளிராஜா, காடுகளின் அடர்த்தியையும், வனக்காவலர் பயிற்சி முகாமையும் ஒரே அளவில் உயிரோட்டமாக காட்சிப்படுத்தியுள்ளார். அவரது கேமரா வேலை தரமான காட்சிகளைத் தந்துள்ளது. இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை, படத்தின் அரசியல் கூர்மையையும், உணர்ச்சித் தருணங்களையும் சிறப்பாக உயர்த்துகிறது. பாடல்களும் மனதில் நிற்கும் வகையில் உள்ளன. குறிப்பாக, இளையராஜாவின் புகழ்பெற்ற “ஓ பிரியா பிரியா” பாடல் வரும் இடம், ஹைக்கூ கவிதை போல நம்மை கவர்கிறது.

 

அதியன் ஆதிரை, தனது கதை சொல்லும் முறையில் அரசாங்கம் எளிய மக்களை நக்சல்கள் என பலியிடும் கொடுமையான வரலாற்றை மிக நேர்மையாக வெளிப்படுத்தியுள்ளார். 2009ம் ஆண்டு காலகட்டத்தில் நடந்த மனித உயிர் மோசடியை வெளிப்படையாகப் பேசும் முயற்சி பாராட்டத்தக்கது. “எந்த மக்களை அடித்தாலும் கேள்விகள் எழாது, கேள்விகள் எழுந்தாலும் அதை அடக்கிவிடலாம்” என்ற நிலைமை எவ்வளவு ஆபத்தானது என்பதை படம் சுட்டிக்காட்டுகிறது.

 

முதல் பாதியில் நாயகர்களின் பயணம் இன்னும் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கலாம். ஆனால், இரண்டாம் பாதி எந்த இடத்திலும் சோர்வடையாமல் சென்று, அரசியலையும் கமர்ஷியல் அம்சங்களையும் நல்ல சமநிலையில் இணைத்துள்ளது.

 

தண்டகாரண்யம் – புதிய களம், புதிய அனுபவத்தைத் தரும் ஒரு அரசியல் சினிமா.

மதிப்பீடு: 3.75 / 5