
திரை விமர்சனம்: ‘நிழல்’
பெண்களுக்கு எதிரான வன்முறைகள், நீதிக்கான போராட்டம் மற்றும் சமூகத்தில் சட்டத்தின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பும் கதைக்களத்துடன் உருவாகியுள்ள திரைப்படம் ‘நிழல்’. ஒரு பழிவாங்கும் கதையாக மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்டவர்களின் மனவேதனையையும் சமூகத்தின் இருண்ட முகத்தையும் வெளிப்படுத்த முயற்சிக்கிறது இந்தப் படம்.
கதையின் மையமாக இருக்கும் ரம்யா கதாபாத்திரத்தில் பிக்பாஸ் புகழ் ஜனனி நடித்துள்ளார். தனது குடும்பத்தைச் சூழ்ந்த துயர சம்பவங்களுக்குப் பிறகு, குற்றவாளிகளைத் தேடி செல்லும் பெண்ணாக அவர் காட்சியளிக்கிறார். தனது உணர்ச்சிகளையும் கோபத்தையும் சமநிலையுடன் வெளிப்படுத்தியிருப்பது அவரது நடிப்பின் பலமாக அமைகிறது. குறிப்பாக குடும்ப உறவுகள் தொடர்பான காட்சிகளில் ஜனனி அளித்துள்ள நடிப்பு கதாபாத்திரத்திற்கு நம்பகத்தன்மையை அளிக்கிறது.
காவல்துறை அதிகாரியாக வரும் விஷாகன், கதையின் முக்கிய திருப்பங்களில் கவனம் ஈர்க்கிறார். சட்டத்தின் வரம்புகளுக்குள் இருந்து குற்றங்களை எதிர்கொள்ள முயற்சிக்கும் அவரது கதாபாத்திரம் கதைக்கு வலு சேர்க்கிறது. அதிரடி மற்றும் உணர்ச்சி கலந்த காட்சிகளில் அவர் அளவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
வழக்கறிஞராக வரும் கௌஷிக், நீதிமன்றக் காட்சிகளில் கதையின் நகர்வுக்கு துணை நிற்கிறார். திவ்யா கிருஷ்ணன், ரமேஷ் கண்ணா, சபீதா ஆனந்த், அபிஷேக் சங்கர் உள்ளிட்ட துணை நடிகர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பாத்திரங்களை முறையாக கையாள்ந்துள்ளனர். குறிப்பாக தவறான முடிவுகளை எடுக்கும் மகனுக்காக போராடும் தந்தையாக சிவன் ஸ்ரீனிவாசன் நடித்திருப்பது கவனிக்கத்தக்கது.
இயக்குநர் ஏ.கே. குமார், குற்றமும் தண்டனையும் மையமாக கொண்ட கதையை விறுவிறுப்பாக நகர்த்த முயற்சித்துள்ளார். சமூகத்தில் அடிக்கடி பேசப்படும் பெண்கள் பாதுகாப்பு, சட்ட நடைமுறைகள் மற்றும் நீதி கிடைப்பதில் உள்ள சிக்கல்கள் போன்ற அம்சங்களை திரைக்கதையில் இணைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மோகன்குமாரின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு தேவையான உணர்வுகளை அளிக்கிறது. குறிப்பாக இரவு நேர காட்சிகள் மற்றும் பதற்றமான தருணங்கள் திரையில் சிறப்பாக பதிவாகியுள்ளன. அபுபக்கரின் இசையில் இடம்பெற்றுள்ள பாடல்கள் கதையின் ஓட்டத்தை பாதிக்காமல் பயணிக்கின்றன. பின்னணி இசை பல இடங்களில் திகில் உணர்வை அதிகரிக்க உதவுகிறது.
எடிட்டர் தினேஷின் பணியும் படத்தின் முக்கிய பலங்களில் ஒன்றாகும். 104 நிமிடங்கள் மட்டுமே ஓடும் திரைப்படம் தேவையற்ற நீட்டிப்புகள் இன்றி நேரடியாக கதைக்குள் செல்லும் வகையில் அமைந்துள்ளது. இதனால் திரைக்கதை இறுதிவரை சுறுசுறுப்பாக நகர்கிறது.
அதே நேரத்தில், சில காட்சிகளில் குறைந்த பட்ஜெட்டின் தாக்கம் வெளிப்படுகிறது. சில துணை நடிகர்களின் நடிப்பு மேலும் மெருகேறியிருக்கலாம் என்ற எண்ணத்தையும் படம் ஏற்படுத்துகிறது. இருப்பினும் கதையின் கரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள சமூகச் செய்தி இந்த குறைகளை ஓரளவு மறக்கச் செய்கின்றன.
மொத்தத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அதற்கான நீதிப் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘நிழல்’, சமூக விழிப்புணர்வுடன் கூடிய திரில்லர் படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தராத படைப்பாக அமைகிறது. பரபரப்பான திரைக்கதை, ஜனனியின் உறுதியான நடிப்பு மற்றும் சமூகப் பின்னணியுடன் கூடிய கதையமைப்பு ஆகியவை படத்தின் முக்கிய பலங்களாக இருக்கின்றன.
மதிப்பீடு: 3.25 / 5 ★★★☆☆
