Friday, October 24
Shadow

‘பறந்து போசி: ஒரு பாசப்போரின் அழகிய பயணம்

‘பறந்து போசி: ஒரு பாசப்போரின் அழகிய பயணம்

தரப்பு: 4.5/5

 

பெற்றோர் கனவுகள், பிள்ளைகளின் ஆசைகள் – இவை இரண்டும் எல்லாத் தருணங்களிலும் ஒரே பாதையில் பயணிக்குமா? இயக்குநர் ராம் எழுதியுள்ள “பறந்து போ” என்ற படம், இந்த கேள்விக்குத் தனது அழகான பதிலை தருகிறது.

 

தனக்குக் கிடைக்காதவையெல்லாம் தன் மகனுக்குக் கிடைக்க வேண்டும் என்ற தந்தையாக மிர்ச்சி சிவா, மகனை உயர்ந்த பள்ளியில் சேர்த்து, அவன் கேட்ட அனைத்தையும் வாங்கிக் கொடுப்பதிலும், எதை செய்தாலும் பாராட்டுவதிலும் ஈடுபடுகிறார். ஆனால் மகனின் உண்மையான விருப்பங்களைப் புரிந்து கொள்ளவில்லை என்பதே கதையின் மையம்.

 

ஒரு தனிப்பட்ட சூழ்நிலையில் இருவரும் நீண்ட இருசக்கர பயணத்தில் செல்ல நேரிடுகிறது. அந்த பயணத்தின் வழியே தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உண்மையான புரிதலும் பாசமும் வெளிப்படுகிறது. இந்தப் பயணமே கதையின் இதயமாக அமைந்துள்ளது.

 

மிர்ச்சி சிவா, ‘கோகுல்’ என்ற கதாபாத்திரத்தில் தனது இயல்பான நகைச்சுவையுடன் தோன்றுகிறார். அவருடைய டைமிங், உடல் மொழி திரையரங்கில் சிரிப்பை எழுப்புகிறது. அவரது மகனாக மித்துல் ரியான் சிறப்பாக நடித்துள்ளாலும், சில காட்சிகளில் ஓவராக போவதாக தோன்றுகிறது.

 

கிரேஸ் ஆண்டனி தனது அழுத்தமான நடிப்பால் நகைச்சுவையிலும் ஈடுபட வைக்கிறார். சிறப்பு தோற்றமாக வந்துள்ள அஞ்சலி மற்றும் அஜு வர்கீஸ் இருவரும் முக்கிய பங்களிப்புகளை வழங்குகின்றனர்.

 

ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம், இயற்கையின் அழகைக் கண்களில் படவேண்டிய அளவுக்கு பிரமாண்டமாகத் திரைக்கு கொண்டு வந்துள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதியின் பாடல்கள் உரையாடல்களாக மனதில் பதிகின்றன. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை, திரையில் உருவாகும் உணர்வுகளுக்கு உயிர் கொடுக்கிறது.

 

தொகுப்பாளர் மதி.வி.எஸ்., படத்தின் ரிதத்தை சீராக வைத்திருக்கிறார். இயக்குநர் ராம் தனது இயல்பான எமோஷனல் கதை சொல்லல் பாணியை இந்த முறை நகைச்சுவை மற்றும் மனம் மகிழும் கதைக்குள் மாற்றியிருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘பறந்து போ’ என்பது ஒரு சிரிப்பும் உணர்வும் கலந்த மகிழ்ச்சியான பயண அனுபவம்.