
கேம் ஆப் லோன் – படம் அல்ல, பாடம்!
அறிமுக இயக்குனர் அபிஷேக் லெஸ்லி இயக்கிய ‘கேம் ஆப் லோன்’ திரைப்படம் வரும் 17ம் தேதி வெளியாகிறது. கடன், சூதாட்டம், மனித மனம் — மூன்றும் இணைந்தால் என்ன நிகழும் என்பதைக் கச்சிதமாகச் சொல்லும் ஒரு எச்சரிக்கை படம் இது.
கதை நாயகன் நிவாஸ் ஆதித்தன் — கொரோனா காலத்தில் வேலை இழந்து மனச்சோர்வில் ஆன்லைன் சூதாட்ட உலகில் விழுகிறார். பணம் பத்தாமல் கடன் வாங்கி, அதை மீண்டும் சூதாட்டத்தில் செலவழிக்கிறார். தோல்வி தொடர்ந்து வர, கடன் தொகை ரூ.65 லட்சம் வரை உயர்கிறது.
அந்தக் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் தவிக்கும் நேரத்தில், கடன் வசூலிக்க வரும் அபிநய் மற்றும் அவரது குழு நாயகனின் வாழ்க்கையை இன்னும் சிக்கலில் தள்ளுகிறது. அதன்பின் நிகழ்வுகள் தான் படம் சொல்லும் முக்கியமான பயணம்.
இன்றைய காலகட்டத்தில் இந்த படத்தின் கதை கரு உண்மை சம்பவமாக பல இடங்களில் நடைபெற்று வருவதை மனதில் வைத்துக் கொண்டு தான் இயக்குனர் இந்த கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் நவீன சமூகத்தின் நிதி பற்றாக்குறை பற்றிய உண்மை நிலையை இயக்குனர் மிக யதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார். இன்று கடன் வாங்குவது எளிது, ஆனால் அதை அடைப்பது தான் மனிதனை முற்றிலும் அழிக்கும் என்பதைக் காட்டுகிறது இந்த படம்.
மேலும், கடன் நிறுவனங்கள் வழங்கும் இன்சூரன்ஸ் நடைமுறை — கடன் வாங்கியவர் தற்கொலை செய்தால் அந்த இழப்பீடு நிறுவனத்திற்கே செல்வது — எனும் அதிர்ச்சியூட்டும் உண்மையையும் படம் வெளிச்சமிட்டு காட்டுகிறது.
அபிநய் நடித்த ரெக்கவரி ஆபீசர் பாத்திரம் பாராட்டத்தக்கது. அவரது வசனத் தாக்கமும், நாயகனை மன அழுத்தத்துக்குள் தள்ளும் விதமும் மிகவும் இயல்பாகப் போதிக்கப்பட்டுள்ளது. நிவாஸ் ஆதித்தனும் அபிநயும் நடிப்பில் ஒருவருக்கொருவர் போட்டியாக மிளிர்கிறார்கள்.
நாயகனின் மனைவியாக எஸ்தர் குறுகிய அளவில் தோன்றினாலும், உணர்ச்சிபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இயக்குனர் அபிஷேக் லெஸ்லி ஒரு குறுகிய இடமான அப்பார்ட்மெண்ட்டை மையமாகக் கொண்டு திரைக்கதையை அமைத்த விதம் சிறப்பு. சலிப்பில்லாமல் சீராக நகரும் திரைக்கதை, கடன் மற்றும் சூதாட்டத்தின் தீமையை நேர்மையாகச் சொல்லுகிறது.
ஒளிப்பதிவாளர் சபரி குறுகிய இடத்தில் வெளிச்சம் மற்றும் ஃப்ரேமிங் மூலம் கதையின் மனநிலையை மிக நுட்பமாகப் பிடித்துள்ளார்.
மொத்தத்தில் ‘கேம் ஆப் லோன்’ என்பது ஒரு படம் மட்டுமல்ல — ஒரு சமூகப் பாடம்.
கடன் எடுக்கும் முன் இருமுறை யோசிக்க வைக்கும் இப்படத்திற்கு பாராட்டுகள்.
⭐ ரேட்டிங்: 3.5 / 5