Thursday, June 25
Shadow

அங்கீகாரம் – ஒடுக்கப்பட்டோரின் கனவுகளுக்கு குரல் கொடுக்கும் அசாதாரண படைப்பு!

அங்கீகாரம் – ஒடுக்கப்பட்டோரின் கனவுகளுக்கு குரல் கொடுக்கும் அசாதாரண படைப்பு!

தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் வெளியாகின்றன. அவற்றில் சில படங்கள் வெறும் பொழுதுபோக்காக மட்டுமே நிற்கின்றன; சில படங்கள் சமூகத்தின் மனசாட்சியைத் தட்டியெழுப்புகின்றன. அந்த வகையில், இந்த வாரம் வெளியாகியுள்ள ‘அங்கீகாரம்’ திரைப்படம் வெறும் ஒரு படம் அல்ல; தமிழ் சினிமாவுக்கே ஒரு அங்கீகாரம் என்று சொல்லும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இயக்குநர் தென்பதியன், தனது முதல் முயற்சியிலேயே மிகவும் துணிச்சலான ஒரு கருவைத் தேர்ந்தெடுத்து அதை நேர்மையாகவும், சமரசமின்றியும் திரையில் பதிவு செய்துள்ளார். விளையாட்டுத் துறையில் திறமை இருந்தும் சமூக, அரசியல் மற்றும் சாதிய தடைகளால் புறக்கணிக்கப்படும் ஒரு இளைஞனின் வாழ்க்கைப் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம், ஆரம்பம் முதல் இறுதிவரை பார்வையாளர்களை சிந்திக்க வைக்கிறது.

சென்னையின் திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் பகுதிகளில் வாழும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அத்லெட் வீரர் KJR. துப்புரவுப் பணியாளராக உழைக்கும் தாய், வழக்கறிஞராகப் பயிற்சி பெறும் தங்கை, குடும்பத்தின் எதிர்கால நம்பிக்கையாக இருக்கும் மகன் – இந்த குடும்பத்தின் கனவுகளே கதையின் அடித்தளம். காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று சாதிக்க வேண்டும் என்ற அவரது கனவை அதிகார வர்க்கத்தின் சூழ்ச்சிகளும், சமூக அநீதிகளும் சிதைக்கின்றன. அதற்கெதிராக அவர் தொடுக்கும் சட்டப்போராட்டமே ‘அங்கீகாரம்’.

படத்தின் முதல் பாதி விளையாட்டு மைதானத்தின் விறுவிறுப்பையும், ஒரு வீரனின் அர்ப்பணிப்பையும் பதிவு செய்கிறது. இரண்டாம் பாதி முழுக்க நீதிமன்ற அரங்கில் நகரும் கோர்ட் டிராமாவாக அமைந்துள்ளது. இந்த இரு பரிமாணங்களையும் ஒரே கதைக்குள் இயல்பாக இணைத்திருக்கும் இயக்குநரின் திரைக்கதை திறமை குறிப்பிடத்தக்கது.

KJR தனது முதல் படத்திலேயே கவனிக்கத்தக்க நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக உணர்ச்சிகரமான காட்சிகளில் அவரது அர்ப்பணிப்பு தெளிவாகத் தெரிகிறது. அவருடன் விஜி வெங்கடேஷ், ரங்கராஜ் பாண்டே, வசுந்தரா, மன்சூர் அலிகான் உள்ளிட்ட நடிகர்கள் தங்கள் கதாபாத்திரங்களுக்கு முழு நியாயமும் செய்துள்ளனர். ஒவ்வொருவரின் பங்களிப்பும் கதைக்கு வலுசேர்க்கிறது.

இசையமைப்பாளர் ஜிப்ரான், படத்தின் உணர்வுகளை இசை வழியாக பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார். பாடல்கள் மனதில் நிற்கின்றன; பின்னணி இசை பல காட்சிகளின் தாக்கத்தை பல மடங்கு உயர்த்துகிறது. ஒளிப்பதிவாளர் விஸ்வநாத், மைதானக் காட்சிகளிலிருந்து நீதிமன்றக் காட்சிகள் வரை ஒவ்வொரு ஃப்ரேமையும் உயிர்ப்புடன் பதிவு செய்துள்ளார். குறிப்பாக விளையாட்டு போட்டிக் காட்சிகள் மற்றும் உச்சக்கட்டக் காட்சிகள் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் சிறப்பாக அமைந்துள்ளன.

‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் மிகப்பெரிய பலம் அதன் கருத்து. திறமை இருந்தும் அங்கீகாரம் மறுக்கப்படும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வலியை இந்த படம் பிரதிபலிக்கிறது. குறிப்பாக விளையாட்டுத் துறையில் அரசியல், அதிகாரம் மற்றும் சமூகப் பாகுபாடுகள் எவ்வாறு ஒரு வீரனின் வாழ்க்கையை மாற்றிவிடுகின்றன என்பதை நேரடியாகக் கேள்வி கேட்கிறது.

சில இடங்களில் நீளம் சற்று அதிகமாகத் தோன்றினாலும், சொல்ல வருகிற கருத்தின் முக்கியத்துவம் அந்தக் குறைகளை மறக்கச் செய்கிறது. வெற்றி பெற வேண்டும் என்றால் திறமை மட்டும் போதாது; அங்கீகாரத்திற்காகவும் போராட வேண்டிய நிலை இன்னும் தொடர்கிறது என்பதைக் கண்ணீருடனும் கோபத்துடனும் பதிவு செய்கிறது இந்த திரைப்படம்.

மொத்தத்தில், ‘அங்கீகாரம்’ ஒரு திரைப்படமாக மட்டுமல்ல, சமூக அநீதிக்கு எதிராக எழுப்பப்பட்ட ஒரு வலுவான குரலாகவும் திகழ்கிறது. ஒடுக்கப்பட்ட பின்னணியிலிருந்து வரும் திறமைகளின் கனவுகளுக்கு துணைநிற்கும் இந்தப் படம், தமிழ் சினிமாவின் முக்கியமான சமூகப் படைப்புகளில் ஒன்றாக நினைவில் நிற்கும்.

மதிப்பீடு: 4.25 / 5

அங்கீகாரம் – திறமைக்கு உரிய மரியாதை கிடைக்க வேண்டுமென்று உரக்கக் கேட்கும் சக்திவாய்ந்த திரைப்படம்!