Friday, October 23
Shadow

திரை விமர்சனம்: ‘தாய்நிலம்’

திரை விமர்சனம்: ‘தாய்நிலம்’

போரின் வலியையும், அகதிகளின் அவலத்தையும் தந்தை – மகள் உறவின் வழியே பேசும் மனதைத் தொடும் படைப்பு!

போர் என்பது வெறும் குண்டுவெடிப்புகளும் துப்பாக்கிச் சத்தங்களும் மட்டுமல்ல. அது ஒரு குடும்பத்தின் கனவுகளைச் சிதைக்கிறது; உறவுகளைப் பிரிக்கிறது; குழந்தைகளின் எதிர்காலத்தைப் பறிக்கிறது. தாய்நாட்டை விட்டு உயிரைக் காப்பாற்ற ஓட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டவர்களின் வலியைச் சொல்லும் ‘தாய்நிலம்’, ஈழத் தமிழர்களின் அவலத்தை மட்டும் பேசாமல், உலகின் எந்த மூலையில் போர் நடந்தாலும் அங்கு சிதைக்கப்படும் மனித வாழ்க்கையைப் பற்றிப் பேசுகிறது.

இலங்கையில் நடைபெற்ற போரின் கொடூரச் சூழலில் மனைவியை இழந்து, மகளுடன் தாய்நாட்டை விட்டு வெளியேறும் ஒரு தந்தையின் பயணமே படத்தின் மையக்கதை. உயிரைக் காப்பாற்றிக் கொள்வதே மிகப்பெரிய போராட்டமாக மாறும் சூழலில், தந்தை – மகள் இருவரும் எதிர்கொள்ளும் சம்பவங்கள் பார்வையாளர்களை வலியுடன் பயணிக்க வைக்கின்றன.

போரின் கொடூரங்களை நேரில் பார்த்தவன் என்ற அச்சமும், மனைவியை இழந்த வேதனையும், மகளின் எதிர்காலம் குறித்த கவலையும் ஒருபுறம் இருக்க, அவளுக்காக எப்படியாவது ஒரு பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற தந்தையின் தவிப்பை அமர் ராமச்சந்திரன் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது கண்களும் உடல்மொழியும் பல இடங்களில் வசனங்களைவிட அதிகமாகப் பேசுகின்றன.

மறுபுறம், போரின் பயங்கரங்களைப் பார்த்திருந்தாலும் குழந்தைக்கே உரிய இயல்பான மகிழ்ச்சியுடன் இருக்கும் சிறுமியாக வரும் நேஹா அமர், கதாபாத்திரத்தை மிகவும் இயல்பாகக் கையாண்டிருக்கிறார். நிமிஷா நம்பியார், தீபக் பிரபாகரன், குருதன்ஷிகா, நிஹல் உள்ளிட்டோரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை சிறப்பாகச் செய்துள்ளனர். ஆதரவற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் கதாபாத்திரத்தில் மறைந்த பாலாசிங் மனதில் நிற்கிறார்.

படத்தின் உணர்வுகளை மேலும் ஆழப்படுத்துகிறது அவுசேப்பச்சனின் பின்னணி இசை. தாமரையின் வரிகளில் உருவான ‘வாடா என் செல்லக்குட்டி’, ‘ஆகாயம் மேலே’, ‘தலைவாரி பூச்சூடி’ உள்ளிட்ட பாடல்கள் வலி, ஏக்கம், நேசம், நம்பிக்கை என பல்வேறு உணர்வுகளைப் பதிவு செய்கின்றன. பிரசாந்த் பிரணவத்தின் ஒளிப்பதிவு போரின் பதற்றத்தையும் கதாபாத்திரங்களின் மனநிலையையும் அழுத்தமாகக் காட்சிப்படுத்துகிறது.

இப்படத்தின் மிகப்பெரிய பலம், போரின் கொடூரத்தை வெறும் குண்டுவெடிப்பு, விமானத் தாக்குதல் போன்ற காட்சிகளோடு நிறுத்திக் கொள்ளாமல், அதன் விளைவாக ஒரு குடும்பம் எப்படி சிதைகிறது என்பதையும், குறிப்பாக குழந்தைகளின் உலகம் எப்படி மாறுகிறது என்பதையும் பேசுவதுதான்.

ஈழத்து மக்கள் அனுபவித்த அவலங்கள் நம்மை வேதனைப்படுத்தும் அதே வேளையில், இயக்குநர் அதை ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பின் பிரச்சினையாக மட்டும் சுருக்காமல், உலகின் எந்தப் பகுதியில் போர் நடந்தாலும் அங்கு தாயையும் தந்தையையும் இழந்து அனாதைகளாகும் குழந்தைகளின் வலியாக விரிவுபடுத்தியிருப்பது படத்தின் முக்கியமான கருத்தாக அமைகிறது.

கிளைமாக்ஸ் காட்சியில், மகள் உணவுப் பொட்டலத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, “எனக்கு பிரியாணிதான் வேண்டும்” என்று கூறும் தருணம் சாதாரணமான காட்சியாக கடந்து செல்லவில்லை. இதுவரை பார்த்த துயரங்களுக்கிடையிலும் குழந்தை மனதில் இருக்கும் ஆசையை வெளிப்படுத்தும் அந்தக் காட்சி, மறுபுறம் “அகதியாக மாறிய பிறகு எந்தச் சூழ்நிலையிலும் வாழ்க்கைக்குத் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்ற உண்மையை நம் மனதில் ஆழமாகப் பதிய வைக்கிறது.

அகதியாக மாறுவது ஒருவரின் விருப்பமல்ல. தங்கள் வீடு, நிலம், உறவுகள், அடையாளம் என அனைத்தையும் விட்டுவிட்டு உயிரைக் காப்பாற்ற ஓட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுபவர்கள் அவர்கள். அதைவிடக் கொடுமையானது, அவர்களை அகதிகளாக மாற்றும் சூழ்நிலைகளை உருவாக்குவதுதான். இந்தப் படத்தைப் பார்க்கும்போது, அகதிகளாக மாறியவர்களின் வலியை மட்டுமல்ல, மனிதர்களை அகதிகளாக மாற்றும் போர்களையும் அதிகார வெறியையும் நாம் கேள்வி கேட்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

அதே நேரத்தில், இலங்கையிலிருந்து தந்தையும் மகளும் அகதிகளாக தமிழகத்துக்கு வந்த பிறகு அவர்கள் எதிர்கொள்ளும் சில நிகழ்வுகள் இயல்புத்தன்மைக்கு சற்று விலகியதாகத் தோன்றுகின்றன. அவர்கள் சந்திக்கும் பெரும்பாலான மனிதர்கள் நல்லவர்களாகவே சித்தரிக்கப்படுவதும், சில இடங்களில் பரிதாபத்தைத் தூண்டும் வகையில் காட்சிகள் வலிந்து அமைக்கப்பட்டிருப்பதும் படத்தின் குறைகளாகத் தெரிகின்றன.

இருப்பினும், அந்தக் குறைகளைத் தாண்டி பார்க்கும்போது ‘தாய்நிலம்’ ஒரு முக்கியமான கேள்வியை நம் முன் வைக்கிறது – “போர்களை உருவாக்குபவர்களின் முடிவுகளுக்காக அப்பாவி மக்கள் ஏன் தங்கள் தாய்நாட்டையும் வாழ்க்கையையும் இழக்க வேண்டும்?”

போரால் பாதிக்கப்படுபவர்கள் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியானவர்கள்தான். அவர்களுக்கும் வீடு இருக்கிறது, குடும்பம் இருக்கிறது, கனவுகள் இருக்கின்றன. ஆனால் ஒரு போர் தொடங்கியவுடன் அந்தக் கனவுகள் அனைத்தும் சிதறுகின்றன. குறிப்பாக குழந்தைகள், தங்கள் தவறே இல்லாமல் அகதிகளாகவும் அனாதைகளாகவும் மாறுகின்றனர்.

அகதிகளின் அவலத்தை வெறும் பரிதாபமாகப் பார்க்காமல், அவர்களை அகதிகளாக மாற்றிய சூழலையும் கேள்விக்குள்ளாக்க வேண்டும் என்ற வலுவான மனிதநேயச் சிந்தனையை ‘தாய்நிலம்’ முன்வைக்கிறது.

மொத்தத்தில்…

‘தாய்நிலம்’ ஒரு திரைப்படமாக மட்டுமல்லாமல், போர் எதை அழிக்கிறது என்பதற்கான மனிதநேயப் பதிவாகவும் இருக்கிறது. ஈழத்து மக்களின் வலியைப் பேசும் அதே நேரத்தில், உலகின் எந்த மூலையில் போர் நடந்தாலும் அதன் சுமையை சுமப்பது அப்பாவி மக்களும் குழந்தைகளும்தான் என்பதை அழுத்தமாக உணர்த்துகிறது.

அகதிகளைப் பரிதாபத்துடன் மட்டும் பார்க்காமல், அகதிகளை உருவாக்கும் போர்களையும் சூழல்களையும் எதிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் விதைக்கிறது ‘தாய்நிலம்’.

மனிதநேயத்தை விரும்பும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய, பார்த்த பிறகும் மனதில் நீண்ட நேரம் தங்கும் திரைப்படம் – ‘தாய்நிலம்’.