
அர்ஜுன்,நிக்கி கல்ராணி,கிரீஷ் நெய்யர்,ஹரிஷ்பெரடி மற்றும் பலர் நடிப்பில், தாமர கண்ணன் இயக்கத்தில் வெளி வந்துள்ள படம் விருந்து.
கதையின் நாயகி, நிக்கி கல்ராணியினுடைய அப்பா முதலாவதாகவும், அதன்பின் அவரது அம்மாவும் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகிறார்கள்,இந்த மர்மக்கொலைகளை தொடர்ந்து, நிக்கி கல்ராணியையும் கொலை செய்ய ஒரு மர்ம கும்பல் முயற்சிக்கிறது, ஆனால் அவர்களிடம் நிக்கி கல்ராணியை காப்பாற்றும் அர்ஜுன், அவருக்கு பாதுகாப்பாக அடைக்கலம் தருகிறார். அர்ஜுனின் நடவடிக்கைகளை பார்த்து அவர் மீது சந்தேகப்படும் நிக்கி கல்ராணி அவரை கொலை செய்ய முயற்சிக்கிறார். இதன் பிறகு நடந்தவை என்ன ? என்பதை விறுவிறுப்பான ட்விஸ்ட்களுடன் சொல்கிறது ‘விருந்து’ படத்தின் மீதி கதை.
அதிரடி ஆக்ஷன் காட்சிகளுக்கு பெயர்பெற்ற ஆக்ஷன் கிங் அர்ஜுன், மீண்டும் முழு நீள ஆக்ஷன் நாயகனாக இந்த படத்தில் திரை வலம் செய்துள்ளார். கதையின் நாயகியாக நடித்துள்ள நிக்கி கல்ராணி, தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்கு பொருத்தமான நடிப்பை வெளிபடித்துள்ளார்.மேலும் கிரீஷ் நெய்யார், ஹரிஷ் பெராடி போன்றோரின் கதாபாத்திரங்களும், அதில் அவர்களது நடிப்பும் நன்கு அமைந்துள்ளது.
த்ரில்லர் கதைகளுக்கு ஒளியும் ஒலியும் மிக முக்கியமானவை, அந்த வரிசையில் இந்த படத்தில் ரதீஷ் வேகாவின் பின்னணி இசை, திரைக்கதையின் விறுவிறுப்புக்கு மிகவும் உறுதுணையாக அமைந்துள்ளது, அதேபோல ஆக்ஷன் கதைகளுக்கேற்ற காட்சிப்பதிவுகளை, ஒளிப்பதிவாளர்கள் ரவிச்சந்திரன் மற்றும் பிரதீப் நாயர் இருவரும் தங்களுடைய சிறப்பான ஒளிப்பதிவு மூலம் அமைத்து, படத்துக்கு பலம் சேர்த்துள்ளார்கள் .படத்தொகுப்பாளர் வி.டி.ஸ்ரீஜித்தின் பங்களிப்பு திரைக்கதையின் வேகத்துக்கு மேலும் வலு கொடுத்துள்ளது
கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர்கள் ,மற்றும் திறமையான தொழில்நுட்பகலைஞர்களுடன் இணைந்து ,சஸ்பென்ஸ் த்ரில்லர் கதைகளுக்கு தேவையான விறுவிறுப்பான திரைக்கதையினையும் கொண்டு, முழு நீள ஆக்ஷன் படமாக இயக்குநர் தாமர கண்ணன் இப்படத்தினை இயக்கியுள்ளார் .
மொத்தத்தில், இந்த ‘விருந்து’ ஆக்ஷன் பட ரசிகர்களுக்கு ஒரு நிறைவான திரை விருந்து
