
இயக்குனர் சக்திவேல் தமிழ் சினிமாவில் மிக சிறந்த இயக்குனர் ஆனால் அவரின் திறமையை இயற்கை கெடுத்து விட்டது அனைவருக்கும் புரியாமல் இருக்கும் உறுமீன் என்று ஒரு மிக சிறந்த படம் வெளியானது அப்போது வந்த புயலால் இந்த படமும் புயலில் அடித்தி சென்றது. பல போராட்டங்களுக்கு பின் மீண்டும் பரு மிக சிறந்த படத்தை கொடுத்து இருக்கிறார். இயக்குனர் சக்திவேல்.
புதுமுகங்களை வைத்து மிக வலுவான அழுத்தமான கதையை இவரால் மட்டுமே இயக்க முடியும் என்பதற்க்கு இந்த படமே சாட்சி
இயக்குனர் எஸ் பி சக்திவேல் இயக்கத்தில் குணாநிதி, காளி வெங்கட், செம்பன் வினோத், சரத் அப்பானி, சவுந்தர்ராஜா, ஸ்ரீரேகா, சண்முகம் முத்துசாமி, ரெஜின் ரோஸ், இதயக்குமார், மாஸ்டர் அஜய், கொற்றவை, தீக்ஷா, மஞ்சுநாதன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த “அலங்கு”.
இப்படத்தினை DG பிலிம் கம்பெனி, மேக்னஸ் பிரொடக்ஷன்ஸ் சார்பில் சபரிஷ், சங்கமித்ரா செளமியா அன்புமணி உள்ளிட்டோர் தயாரித்திருக்கின்றனர்.
மேலும், அஜீஷ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பாண்டிக்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தொகுப்பினை பாண்டிக்குமார் கவனித்திருக்கிறார்.
கதைக்குள் பயணித்துவிடலாம்,
கோவை மாவட்டம் ஆனைக்கட்டி பகுதியில் கதை நகர்கிறது. மலைப் பகுதியில் விவசாயம் செய்து வருகிறார் ஸ்ரீரேகா. இவருக்கு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். காட்டு யானை தாக்கி கணவன் இறந்து விட, தனியொரு பெண்ணாக இரு பிள்ளைகளையும் வளர்க்கிறார் ஸ்ரீ ரேகா.
வட்டிக்கு கடன் வாங்கி தனது மகன் குணாநிதியை படிக்க வைக்கிறார் ஸ்ரீரேகா. சிறிய பிரச்சனை காரணமாக கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் ஆகிறார் குணாநிதி.
கடன் கொடுத்தவர்கள் ஸ்ரீரேகாவிடம் கேட்க, வேறு வழியின்றி கடனை அடைக்க, தனது நண்பர்களோடு ஆசையாக வளர்க்கும் நாயை அழைத்துக் கொண்டு கேரளாவிற்கு செல்கிறார் குணாநிதி.
திருமணமாகி பல வருடங்களுக்குப் பிறந்த குழந்தை என்பதால், தன் பெண் குழந்தை மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார் செம்பன் வினோத். இவரது, தோட்டத்திற்கு தான் வேலைக்குச் செல்கிறார் குணாநிதி.
வீட்டு விழாவில் தனது மகளை நாய் ஒன்று கடித்துவிட்டதைக் கண்ட செம்பன் வினோத், அந்த ஏரியாவில் இருக்கும் அனைத்து நாய்களை கொன்று விட தனது அடியாட்களிடம் உத்தரவிடுகிறார்.
பல நாய்களை கொன்று குவிக்கும் அவரது அடியாட்கள், குணாநிதியின் நாயையும் கொல்ல செல்கின்றனர். அப்போது நடக்கும் சண்டையில் செம்பன் வினோத்தின் வலதுகரமாக இருந்த சரத் அப்பாணியின் கையை துண்டாக வெட்டி விடுகிறார் குணாநிதி.
அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
கதையின் நாயகனாக மனதோடு மிக நெருக்கமாக பயணம் செய்தவர் நடிகர் குணாநிதி. இதற்கு முன் செல்ஃபி படத்தில் சிறிய கதாபாத்திரம் ஏற்று நடித்து பிரபலமான குணாநிதி, இப்படத்தில் முழுக்க முழுக்க தர்மன் கதாபாத்திரமாகவே மாறி கதையோடு ஒன்றி இருக்கிறார். இயல்பான நடிப்பைக் கொடுத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார். நாய் மீது இருக்கும் பாசத்தை வெளிப்படுத்தும் இடத்தில் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும் நன்றாகவே ரிஸ்க் எடுத்திருக்கிறார் குணாநிதி.
குணாநிதியின் தாயாக நடித்த ஸ்ரீரேகா படத்திற்கு ஒரு தூணாக வந்து நிற்கிறார். அவரது தோற்றம், உடல்மொழி, துணிச்சல், என நடிப்பில் புதிய பரிணாமத்தைக் காட்டியிருக்கிறார். காளி வெங்கட் தனக்குக் கொடுக்கப்பட்டதை அளவோடு செய்து முடித்திருக்கிறார்.
குணாநிதியின் நண்பர்களாக வந்த இருவரும் மிரட்டலான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். அதிலும், சிறுவனாக நடித்தவர் படம் பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துவிட்டார்.
தனது மகள் மீது வைத்திருக்கும் பாசத்தை ஒவ்வொரு இடத்திலும் காட்டும் சமயத்தில் தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் செம்பன் வினோத். சர்ரத் அப்பாணி மிரள வைத்திருக்கிறார்.
இந்த பூமியில் உயிர் என்றால் அது மனிதர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து ஜீவராசிகளுக்கும் தான் என்ற கருத்தை மையமாகக் கொண்டு இப்படத்தை ஒரு உயிரோட்டமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் எஸ் பி சக்திவேல். முதல் பாதியில் இருந்த ஒரு வேகம், இரண்டாம் பாதியில் சற்று குறைந்திருக்கிறது மட்டுமே சற்று நெருடல்.
அஜிஷின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதையோடு நாமும் பயணமாக வைத்தது. ஒளிப்பதிவு அழகு.
அலங்கு – மணிமகுடம் …
