Friday, October 24
Shadow

காதல்ல இவ்வளவு பிரச்சனை வருமா? காதலர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய லவ்வர் படத்தின் விமர்சனம்..!!!

கடந்த ஆண்டு குட் நைட் என்ற ஃபீல் குட் படத்தை கொடுத்து இளைஞர்கள் மனதில் இடம் பிடித்த மணிகண்டனின் நடிப்பில் அடுத்ததாக வெளியாகி உள்ள படம் தான் லவ்வர். அறிமுக இயக்குனர் பிரபு ராம் வியாஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் கெளரிப்பிரியா நாயகியாக நடித்துள்ளார்.

 

படத்தின் கதையை சுருக்கமாக கூற வேண்டும் என்றால், மணிகண்டன் மற்றும் கெளரிப்பிரியா ஆகிய இருவரும் கல்லுரி காலத்தில் இருந்தே காதலித்து வருகிறார்கள். கிட்டத்தட்ட 6 ஆண்டு காதல ஒரு கட்டத்தில் கசந்து விட தொடங்குகிறது.

 

அதற்கு காரணம் வேலைக்கு செல்லாமல் சொந்த தொழில் தான் செய்வேன் என குடித்து விட்டு சுற்றும் மணிகண்டனின் கேரக்டர் அல்லது பெரிய ஐடி கம்பெனியில் வேலைக்கு சேர்ந்த கெளரிப்பிரியாவை அடிக்கடி சந்தேகிக்கும் மணிகண்டனின் சந்தேக பார்வை என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

வேலை இல்லாமல் தொழிலும் தொடங்க முடியாமல் மொத்த வெறுப்பையும் காதலி மீது காட்டும் மணிகண்டன் ஒரு கட்டத்தில் கெளரிப்பிரியாவின் தனிப்பட்ட விஷயத்தில் தலையிட இருவரின் காதலிலும் விரிசல் ஏற்படுகிறது.

இறுதியில் அவர்கள் இருவரும் சேர்ந்தார்களா? மணிகண்டன் தொழில் தொடங்கினாரா என்பது தான் மீதிக்கதை. வழக்கம்போல் இந்த படத்திலும் மணிகண்டன் அவரின் முழு நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அதில் எந்த குறையும் இல்லை.

ஆனால் படம் முழுக்க தண்ணி, சிகரெட் மற்றும் கஞ்சா என தொடர்ந்து அவர் பிடிப்பது தான் பார்ப்பவர்களுக்கு சற்று அசெளகரியமாக உள்ளது. அதே சமயம் தன் காதலன் குடிக்கு அடிமையான போதும் அவனை விட்டு செல்ல மனமில்லாமல் தவிக்கும் கெளரிப்பிரியாவின் நடிப்பு அருமை.

 

இவர்கள் தவிர படத்தில் வரும் மற்ற கேரக்டர்களும் அவர்களின் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். இன்றைய கால காதலை அப்பட்டமாக படத்தில் காட்டி இருப்பது பாராட்டிற்குரியது. மணிகண்டன் மற்றும் கெளரிப்பிரியா இடையே உள்ள டாக்ஸிக் காதல் தான் லவ்வர் படத்தின் கதை.

நிச்சயம் இன்றைய காதலர்கள் பலரின் வாழ்க்கையோடு இந்த படம் ஒத்துப்போகும் என தோன்றுகிறது. எனவே இந்த படத்தை பார்க்கும் பலருக்கு லவ் பண்ணலாமா வேண்டாமா என்பது போன்ற எண்ணங்கள் தோன்றவும் வாய்ப்புள்ளது.