Friday, October 24
Shadow

ரெட் பிளவர் – வன்முறை காட்சிகளால் நிரம்பிய எதிர்கால கற்பனை

ரெட் பிளவர் – வன்முறை காட்சிகளால் நிரம்பிய எதிர்கால கற்பனை

 

தற்போது உலகின் பல நாடுகளுக்கிடையே நடைபெற்று வரும் ஆயுத மோதல்கள், பொருளாதாரப் போர்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு, 20 ஆண்டுகள் கழித்து — அதாவது 2047ஆம் ஆண்டில் — உலகம் எப்படி இருக்கும் என்பதை பிரமாண்டமான காட்சிகளின் மூலம் கற்பனை செய்ய முயன்றிருக்கிறது ரெட் பிளவர்.

 

கதை 2047ஆம் ஆண்டில் நடக்கிறது. மூன்றாவது உலகப்போர் முடிந்த பின், பல நாடுகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த ராணுவத் தலைவர் மால்கம், இந்தியாவையும் குறிவைக்கிறார். இந்திய பெண்களை உலகம் முழுவதும் சித்திரவதை செய்து கொலை செய்வது, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் நாச வேலைகள் செய்வது போன்ற நடவடிக்கைகள் தொடங்கப்படுகின்றன. இதனைத் தடுக்க, இந்திய உளவுத்துறை அதிகாரி விக்னேஷின் தலைமையில் அரசு “ஆபரேஷன் ரெட் பிளவர்” மேற்கொள்கிறது. அந்த ஆபரேஷன் என்ன? விக்னேஷ் எப்படி இந்தியாவை காப்பாற்றுகிறார்? என்பதே படத்தின் மையக் கரு.

 

விக்னேஷ் ஹீரோவும் வில்லனாகவும் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். வில்லனாக இந்தியாவை அழிக்கத் திட்டமிடும் சக்திகளுடன் கைகோர்த்தவர், ஹீரோவாக இந்தியாவை காப்பாற்றப் போராடுபவர். பெண்களை வேட்டையாடும் வில்லனும், காப்பாற்றும் ஹீரோவுமாக, விக்னேஷ் வேடங்களை வாழ்ந்து காட்டியிருக்கிறார்.

 

நாயகியாக மணிஷா ஜெஷ்னானி அதிக கவர்ச்சி மையமாக நடித்துள்ளார். வில்லனின் கற்பனையிலும், ஹீரோவின் காதலியாகவும் தோன்றும் அவர், சில காட்சிகளில் வன்முறையையும் சந்திக்கிறார்.

 

இரண்டாவது கதாநாயகிகளாக அல்மஸ் ஆதம், ஷாம் உள்ளிட்டோர் மட்டுமல்லாமல், படத்தில் வரும் பெண்கள் பெரும்பாலும் குறைவான ஆடையுடன் காட்சியளிக்கிறார்கள். சிலர் உடலை மறைக்கும் ஆடை அணிந்திருந்தாலும், அதை கிழித்து கவர்ச்சியாக காட்டும் வகையில் கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

 

இந்திய பிரதமராக ஒய்.ஜி. மகேந்திரன், ராணுவத் தளபதியாக நாசர், ஜனாதிபதியாக ஒரு நடிகை, உலகத்தை கட்டுப்படுத்த முயலும் லூசிபராக தலைவாசல் விஜய் ஆகியோர் வித்தியாசமான கதாபாத்திரங்களில் பாராட்டத்தக்க நடிப்பை வழங்கியுள்ளனர்.

 

ஜான் விஜய், அஜய் ரத்னம், டி.எம். கார்த்திக், சுரேஷ் மேனன், நிழல்கல் ரவி, லீலா சாம்சன் உள்ளிட்ட பலர் சிறிய தோற்றங்களோடு மட்டுமே இருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் தேவ சூர்யா பெரும்பாலும் கிரீன் மேட் ஸ்டுடியோவில் படமாக்கியிருக்கிறார். சாம்பல், கருப்பு நிறங்களை அதிகம் பயன்படுத்தி, கிராபிக்ஸ் குறைபாடுகளை மறைத்துள்ளார்.

 

இசையமைப்பாளர் சந்தோஷ் ராம் அளித்த பாடல்களும் பின்னணி இசையும் குறிப்பிடத்தக்கதாக இல்லை. ஆக்‌ஷன் காட்சிகளுக்கு பீட் இசை மட்டுமே பொருத்தமாக உள்ளது.

 

படத்தொகுப்பாளர் அரவிந்தன் ஆறுமுகம் சவாலான CGI காட்சிகளை இணைத்து படத்தை அமைத்துள்ளார். சில குறைகள் இருந்தாலும், கதை தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

 

இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன், ஹாலிவுட் பாணியில் பிரமாண்ட ஆக்‌ஷன் படத்தை உருவாக்க முயன்றுள்ளார். கதைக்களத்தில் தொலைநோக்கு பார்வை இருந்தாலும், காட்சிகளில் வன்முறை அதிகம் இடம் பெற்றுள்ளது. பெண்களை பெரும்பாலும் ஆபாசமாக சித்தரித்திருப்பது படத்தின் தாக்கத்தை குறைத்துள்ளது.

 

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய அமைப்பாக ரெட் பிளவரை கற்பனை செய்து, கிராபிக்ஸ் மூலம் காட்சியளித்த விதம் பாராட்டத்தக்கது. ஆனால் சரியான முறையில் சொல்லப்பட்டிருந்தால், படம் மேலும் ஈர்த்திருக்கும்.

 

மொத்தத்தில், ரெட் பிளவர் வன்முறை மற்றும் வன்மத்தால் நிறைந்த எதிர்காலக் கற்பனை.