
“திவ்யா” – திரை விமர்சனம்
கிராமத்து மண்வாசனையுடன் காதல், நட்பு மற்றும் சமூகப் பிரச்சினைகளை இணைத்து சொல்லும் முயற்சியாக உருவாகியிருக்கும் படம் தான் “திவ்யா”. மதுரையைச் சுற்றியுள்ள ஒரு கிராமத்தை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படம், காதலுக்கு எதிராக எழும் ஜாதி மனநிலைகளையும் அதனால் உருவாகும் மோதல்களையும் மையமாகக் கொண்டுள்ளது.
கல்லூரியில் படிக்கும் இளைஞனாக கதாநாயகன் ஆர்.ஜே.பி தனது இரண்டு நண்பர்களுடன் வாழும் சாதாரண வாழ்க்கையில் கதை தொடங்குகிறது. நண்பர்களில் ஒருவரின் காதல் காரணமாக ஏற்படும் சிறிய சம்பவம், கதாநாயகன் மற்றும் கதாநாயகி கேத்தி இடையே நட்பை உருவாக்குகிறது. அந்த நட்பு காலப்போக்கில் காதலாக மாறுகிறது.ஆனால் இந்த காதல் சாதாரணமான ஒன்றல்ல. சமூகத்தில் இன்னும் வேரூன்றிக் கிடக்கும் ஜாதி வேறுபாடு இந்த உறவிற்கு பெரிய தடையாக நிற்கிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நாயகனும், உயர்சாதி குடும்பத்தைச் சேர்ந்த நாயகியும் காதலில் விழுவது கிராமத்தில் பெரும் கலவரத்துக்கே வழிவகுக்கிறது. நாயகியின் தந்தையாக வரும் அனந்த் ராம், ஜாதி கௌரவத்தை முன்னிறுத்தும் கடுமையான மனிதராக கதையில் முக்கிய மோதலை உருவாக்குகிறார்.
கதாநாயகனுக்கு பெற்றோர் இல்லாமல் தாத்தா பவுன்ராஜ் வளர்ப்பில் வளர்ந்தவர். அவர்களின் குலத்தொழிலான பறை வாசிப்பும் கதையின் சமூகப் பின்னணியை வலுப்படுத்துகிறது. காதலுக்கும் ஜாதி மனநிலைக்கும் இடையில் உருவாகும் மோதல் இறுதியில் எப்படிப் போய் முடிகிறது என்பதையே படம் விறுவிறுப்பாகக் கூறுகிறது.
இந்தப் படத்தின் சிறப்பு என்னவென்றால், கதாநாயகனாக நடித்த ஆர்.ஜே.பியே கதையை எழுதி இயக்கியதுடன், தயாரிப்பிலும் பங்கெடுத்துள்ளார். குறைந்த பட்ஜெட்டில் உருவான படம் என்றாலும், கதையின் நேர்த்தியான சொல்லாக்கம் மற்றும் காட்சிகளின் இயல்பான அமைப்பு பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது.
புதிய முகமாக வரும் நாயகி கேத்தி தனது பாத்திரத்தை இயல்பாக கையாள்கிறார். அனுபவம் குறைந்திருந்தாலும் கதைக்கு தேவையான உணர்ச்சிகளை நன்றாக வெளிப்படுத்தியுள்ளார். நண்பர்களாக வரும் சபி மற்றும் ஜிவி கதையின் பல இடங்களில் உயிரூட்டுகின்றனர்.
இசையமைப்பாளர் சங்கர் ராம் வழங்கிய பின்னணி இசை சில காட்சிகளில் உணர்ச்சியை வலுப்படுத்துகிறது.
ஒளிப்பதிவாளர் செல்வகுமார் கிராமப்புற சூழலை இயல்பாக பதிவு செய்திருக்கிறார். வளர்பாண்டியின் எடிட்டிங் கதை ஓட்டத்தை சீராக வைத்திருக்கிறது.
மொத்தத்தில் பெரிய நட்சத்திரங்களோ, பிரமாண்ட தொழில்நுட்ப குழுவோ இல்லாமல் உருவானாலும், “திவ்யா” ஒரு எளிமையான காதல் கதையின் வழியாக சமூகச் செய்தியையும் சொல்ல முயற்சிக்கும் படம். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி பலரையும் கண்கலங்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
எளிமையான கதை, உண்மையான உணர்ச்சிகள் – அதுவே “திவ்யா”வின் அழகு.
தொழில்நுட்ப குழு
தயாரிப்பு: RJP Media
தயாரிப்பாளர்: கலாரவி
கதை, திரைக்கதை, இயக்கம்: ஆர்.ஜே.பி
இசை: சங்கர் ராம்
ஒளிப்பதிவு: செல்வகுமார்
எடிட்டிங்: வளர்பாண்டி
பாடலாசிரியர்: கவிகண்ணண்
போஸ்ட் விளம்பர வடிவமைப்பு: வினோத்
மக்கள் தொடர்பு: சரண்
